தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொல்லி
தமிழ்மொழியை இழிவுபடுத்தினாரா தந்தை பெரியார்?
என்கிற கேள்விக்கான பதில் :
தந்தை பெரியார் தமிழை இழிவுபடுத்தவே இல்லை. மாறாக, பெரியார் தமிழ்மொயின் உயர்வுக்காகப் பாடுபட்டார், தமிழ்மொழியை உயர்த்தினார்.
தமிழ்மொழியில் எழுத்துச் சீர்திருத்தம்
கொண்டுவர வேண்டி அவர் போராடியபோதும், மக்கள் பயன்பெறும் விதமாக தமிழ் இலக்கியங்கள்
வேண்டுமென வலியுறுத்திய போதும் அவர் கூறிய வற்றிலிருந்து சில சொற்களை மட்டும்
எடுத்துச்சொல்லி மக்களைத் திசைதிருப்பும்
தந்திரமே அவர்மீது சாட்டப்படும் இக்குற்றச்சாட்டு.
ஒரு ஆன்மீகவாதி “ தந்தை பெரியார்
தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை/மொழி என்று சொன்னரே
அதை இங்கே உள்ள திராவிட சித்தாந்தவாதிகள் ஏற்கிறார்களா?”
என்று கேட்டார் என வைத்துக்கொள்வோம்.
அந்த ஆன்மீகவாதி கேட்ட
கேள்வியிலுள்ள, அவர் பயன்படுத்திய
சிலசொற்களை கோர்த்து
“தமிழ் ஒரு
காட்டுமிராண்டி பாஷை”
என்று ஆன்மீகவாதி
கூறிவிட்டார்
என்று நாம் கூறினால் அது
முட்டாள்தனம் தானே? அதுபோன்றதே தந்தை பெரியார்
மீது வைக்கப்படும்
குற்றசாட்டும் முட்டாள் தனமானது ஆகும்!
ஒருபொழுதும் தந்தை பெரியார் தமிழ் மொழியை இழிவுபடுத்தவே இல்லை.
சரி, இனி தமிழ்மொழிபற்றி பெரியார் என்ன கூறினார்
எனப் பார்ப்போம்:
“தமிழ் முன்னேற்றமடைந்த உலக மொழி
வரிசையில் இருக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் தமிழுக்கும் கடவுளுக்கும் இருக்கும் சம்மந்தத்தை கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்” என்றார்.
“மதம் சம்பந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக்கியம் காண்பது
மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ்
இலக்கணமும் கூட மதத்தோடு பொறுத்தப்பட்டே இருக்கின்றது” என்றார்.
“முன்பு மதமும், கடவுளும், சாதியும் தலை தூக்கி நின்றிருந்த காலத்திற்
கேற்றவாறு தமிழைக் கெடுத்துவிட்டார்கள் ” என்றார்.
“ (மதம் கடவுள் என) காட்டுமிராண்டி வாழ்க்கை
வாழ்ந்து தமிழையும் அதற்கேற்ற முறையில் காட்டுமிராண்டிகளுக்கு ஏற்ற மொழியாக கையாண்டிருக்கிறார்கள்.
எனவே, காலத்திற்கேற்றவாறு தமிழ் மொழியை இன்னமும்
சீர்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. பழங்கால அநாகரீகத்திற்கு
ஏற்றவைகளை மாற்றி இக்கால
நாகரீகத்திற்கு தக்கபடி சீராக்குவது அவசியம்” என்றார்.
(ஆக,
காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்து தமிழையும் காட்டுமிராண்டிகளுக்கு ஏற்ற
மொழியாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லியிருக்கின்றார் தந்தை பெரியார்.)
“தமிழ் புனிதத் தனமை உடையது, சிவன் பேசியது, தேவார திருவாசாகங்களை கொண்ட மொழி என்பதற்காக நான் (தமிழை) காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழிகளில் இந்த தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே (போராடுகின்றேன்) ” என்றார்.
“இன்றைக்கும் தமிழனுக்கு அறிவுறுத்த இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற காட்டுமிராண்டி குப்பைக்
கூளங்களைவிட காரியத்திற்கு பயன்படும் சாதனம் எதுவுமே தமிழில் இல்லாமல் போய்விட்டது
” என்றார்.
“தமிழ் சிவனும் சுப்பிரமணியனும் பேசியமொழி, சிவன் உண்டாக்கிய மொழி என பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதே சிவனும் சுப்பிரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா? இன்று நாமோ கடவுள்களோ போரிட நேர்ந்தால் வில்லும் வேலுமா உபயோகிப்போம். (ஆகவே) தமிழ்மொழியை முன்னேற்றும் வகையில் (அதனை) கற்கச் சுலப படுத்தி மாற்றம் செய்யுங்கள் ” என்றார்.
“ சுலபமாகக் கற்றுக்கொள்ளப் படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்” என தமிழ்மொழி சிறந்தோங்க வழிவகையையே கூறினார் தந்தை பெரியார்.
தனது தொடர் போராட்டங்களால் திராவிட விழிப்புணர்வால்
பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை நம் இந்திய, தமிழக அரசுகளும் சிங்கப்பூர்,
மலேசியா நாட்டு அரசுகளும் ஏற்று நடைமுறைப் படுத்துகின்றன. தமிழ் கூறும் நல்லுலகத்தினராகிய
நாம் அனைவரும் இன்று அதையே தான் பின்பற்றுகிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் ஒருபோதும் தமிழ்மொழியை இழிவு படுத்தவேயில்லை. மாறாக தமிழை உயர்த்தவே போராடினார்.