Monday, 19 August 2019

ஆயா!

                    (எடுத்துக்காட்டு படம்)

                              ஆயா!
                               ~~~~~
   அறைக்குள் வேகமாக நுழைந்த அவசரப் பிரிவு வார்டு பாய் சேகரைப் பார்த்த கண்மணி "என்ன?" என்றதும்
"சிஸ்டர், நெரைய காயத்தோட ஒரு பேழன்ட்... ட்யூட்டீ டாக்டர் உங்கள உடனே கூப்பிடறார்" என்றார் வார்டு பாய்.

   உள் நோயாளிகளுக்காக மருந்துகளை அடுக்கிக் கொண்டிருந்த கண்மணி "தோ வரேன் பா" என்றபடி " ஏ.. ஸ்பின்ஸீ.. முன்னாடி போய்வரேன், கொஞ்சம் யாரும் கை வைக்காமல் பார்த்துக்கோ...
ஏன் இன்னைக்கு காவேரி லீவா " என்று அப்போதுதான் அறைக்குள் வந்த பிரபாவிடம் கேட்க "தெரியலையே அக்கா, நீங்க போய்வாங்க நான் பார்த்துகிறேன் " என்றாள் புன்னகையோடு. தன்னை ஆயா எனக் கூப்பிடாமல் செல்லப் பெயரிட்டு நர்ஸ் கண்மணி அப்படி கூப்பிட்டது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. 'அதென்ன ஆணை மட்டும் எத்தனை வயதானாலும் வார்டு பாய் என்பது பெண்ணென்றால் மட்டும் ஆயா என்பது' என்ற தனது பழைய சந்தேகத்தை மீண்டும் ஒருமுறை தனக்குள் கேட்டுக் கொண்டே
உள்நோயாளிகளுக்குத் தரவேண்டிய உணவுகளை எடுத்து தள்ளிச் செல்லும் ட்ராலியில் வரிசை படுத்தி வைத்துக் கொண்டாள் பிரபா.

   "குட்மார்னிங் டாக்டர்" "குட்மார்னிங்,  சிஸ்டர் இவருக்கு ஏகப்பட்ட காயம் இருக்கு, சம் நீட்ஸ்  வெல் கிளீனிங்க் ( -சில காயங்கள் நன்றாக சுத்தப் படுத்தப் படவேணும் ) அதான் உங்களைக் கூப்டேன், ப்ளீஸ்" எனறவுடன் "ஒகே டாக்டர்.." என சொல்லிவிட்டு அவர் கைகாட்டிய இளைஞனை உடன் வர சைகை காட்டிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்த கண்மணி ஸ்டூல் ஒன்றைக் காட்டி "இங்கே உக்காரு"என உட்கார்ந்தான் அவன். சுத்தப்படுத்தத் தேவையானவை வைக்கப்பட்டிருந்த ட்ரேயை எடுத்துக்கொண்டு இளைஞனிடம் வந்த கண்மணி "சட்டையை முழுசா கழட்டு" என்றதும் பொத்தான்களை மட்டும் அவிழ்த்திருந்த அவன் முழு சட்டையையும் கழட்ட, முன்னும் பின்னுமாய் முதலுதவி செய்யப்பட்ட ஏகப்பட்ட கீறல்கள் இருக்க "என்னய்யா என்ன ஆச்சு? யார் மருந்து தடவினாங்க.. ம்? ..சொல்லு.." என கேட்க "ஆரம்ப சுகாதார மைய சிஸ்டர்தான் போட்டாங்க, அவங்கதான் பெரியாஸ்பத்திரி போ ன்னாங்க.." என்றதும் "எப்படி வந்துது காயம்..ம்.." "ஏற்கனவே டாக்டர் கிட்ட  சொல்லிட்டேன்ங்களே" என்றவனிடம் "ஏன் எங்ககிட்டே சொல்ல மாட்டீங்களோ.. ஒன்னு விடாம விவரமா சொல்லு.." ஏன்றவுடன் அவன் நடந்ததை சொல்ல ஆரம்பிக்க சிறு காயங்களை சுத்தப்படுத்த, மருந்து பட்டதும் சுளீரென எரிய நெளிந்தான். "..ம் சொல்லு..சொல்லு.." என அவனது கவனத்தை திசை திருப்பிய கண்மணி,  சொல்வதில் அவனுக்கு கவனம் போனதும் ஆழமான காயங்களை சுத்தம் செய்து முடிக்க, அவனும் சொல்லி முடித்தான். "ம்..வேடிக்கையான ஆள்தான் யா நீ,  உன் பேர் என்ன சொன்னே.." "சந்நியாசி", "..ம், சந்நியாசி...அந்த கவுன்ட்டர்ல போய் சீட்ட காட்டி மருந்தை வாங்கிக்கோ போ"  என்றனுப்பினார்.

   " ...சுத்தம் பண்ணனும்,பேழனட் கூட இருக்றவங்க எல்லாம்  கொஞ்சம் வெளில போங்க... டாக்டர் வந்துபோற நேரம் வரை வெளில இருங்க...ஏம்மா நீங்க யாரு? அவங்க  ஜோய்ஸுக்கு சொந்தமா? பக்கத்தில இருக்கீங்க, " என பிரபா கேட்க அப்பெண் "இல்லம்மா...
அங்க ஆம்பளைங்க வாடுல எம் புருசன் இருக்காரும்மா... பாத்துக்க யாருமில்ல மா அதான் இங்கே தரைல படுத்திருந்தேன்" என்றதும் "அப்டிலாம் இங்க வரகூடாது டாக்டருக்கு தெரிஞ்சா நாங்க பாட்டு வாங்கனும், போங்க வெளில போய் பின் பக்கத்தில் நின்னுகுங்க..நான் ஏதோ ஜோய்ஸோட சொந்தம் ன்னுல நெனச்சிட்டேன்..போங்க வெளில போய் இருங்க"என விரட்டினாள்.

   நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை  உதறி சுத்தம் செய்து படுக்கைகளை சரி செய்துவிட்டு அறைக்குத் திரும்பிய பிரபா,
'டாக்டர் ரவுண்ட்ஸ் முடிஞ்சப்றம் அந்த பேழன்ட் ஜோய்ஸு க்கு நாமே ரொட்டி, பால் ஊட்டி விட்டுடனும், ரொம்ப பாவம், யாருக்குமே இப்படி ஆகக் கூடாது. ஒரு ஜில்லாவுக்கே கலக்டரா இருந்து நெறைய சேவை பண்ணினதா சொல்றாங்க, அப்ப அந்த புண்ணியமெலாம் எங்க போச்சு?' எனத் தனக்குள்ளே வினவிக் கொண்டாள். தன் கைப்பையிலிருந்த செல்போனை எடுத்து கூகுளில் கேன்சர் பற்றித் தேடினாள்.

   ஆஸ்பத்ரியின் நடைபாதையின் ஒருபுறம் வார்டுகளும் மறுபுறத்தில் செவிலியர் அறைகளும் இருப்பதால் அவ்வப்போது நோயாளிகளோடு உடன் இருப்போர் வந்து நோயாளிக்கு 'இப்படி இருக்கு, அப்படி இருக்கு உடனே வாங்களேன்' என்பது பழக்கம் என்பதால் அறை வாசலில் யாரோ வந்திருப்பதாய் தெரிய "என்னாச்சு... யாருக்கு என்ன..." என்றவாறே திரும்பிய பிரபா அங்கே தான் விரட்டிய பெண் நிற்பது பார்த்து "நீங்க ஏன் இங்க நிக்கறீங்க" என கேட்க "ராத்திரிலேர்ந்து எதும் சாப்டுல மா.. டாக்டர் போனதும் ரெண்டே ரெண்டு துண்டு ரொட்டி தாங்களேன் சிஸ்டர்.. உங்களுக்கு புண்ணியமா போகும்" என்று அப்பெண் கைகூப்ப பிரபாவின் தொண்டையடைத்து பேச்சே வரவில்லை. திரும்பித் தனது கைப்பையை திறந்து சாப்பாடு டப்பாவை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்து "இந்தாங்க இதில தயிர்சாதம் இருக்கு எடுத்துகிட்டு போய் சாப்டுங்க பின்னாடி மரத்தடி கிட்ட போய் சாப்டுங்க" என்று கொடுக்க, டப்பாவை வாங்கிக் கொண்ட அப்பெண் "நல்லாருக்கனும் மா நீங்க"என்று சொல்லி வேகமாய் நடந்தாள்.

   கூகுளுக்குள் மீண்டும் போக மனமில்லாமல் அறைவாசலையே குத்திட்டு பார்த்தவளாய் இருந்தாள் பிரபா.
"ஏய் பிரபா என்னடி பண்ணே...
இன்னைக்கும் உன் சாப்பாட்டை தானம் பண்ணிட்டியா..உன் டப்பாவை அந்தம்மா எடுத்துட்டு போவுது" என்று அறையினுள் நுழைந்தபடியே கண்மணி கேட்டதும் "போவட்டும் சிஸ்டர்...நான் கடையிலே வாங்கி சாப்டுக்கறேன்" என்றதற்கு "அடியேய்..பொண்ணு வீட்டுக்கு போறேன் கடை இன்னைக்கு லீவுன்னு நேத்து ராமு சொன்னதை மறந்துட்டியா" என்றதும் "விடுங்க சிஸ்டர் டவுனுக்குள்ள போய் சாப்டுக்கலாம்" என்றாள் பிரபா.

  "என்னமோ போ.. சாப்டாம கெடந்து அந்த ஜோய்ஸ் மாதிரி உனக்கும் கேன்சர் தான் வரப் போகுது...." என்றதும், "ஏன் சிஸ்டர்
அவங்களுக்கு  வீட்ல யாரும் இல்லயா?சொந்தம்ன்னு கூட யாருமே இல்லயா, ஜிப்மர், அடையாறு ன்னு பெரிய ஆஸ்பத்ரில காட்டி பாக்கலாம்ல.." என்றதும் "இவங்களையே 4, 5 நாளா ஆள் வெளியிலேயே வரலைன்னு அக்கம் பக்கத்தில் இருக்றவங்க போலீசுக்கு சொல்லி கதவை உடச்சு மீட்டு வந்து இங்க சேர்த்திருக்கு, செல்போன்ல இருந்ததை வச்சி தங்கச்சி ஒன்னு கேரளாவுல இருக்குன்னு கண்டுபிடிச்சு தகவல் சொல்லி இருக்காங்க, இன்னைக்கோ நாளைக்கோ வரலாம். மருந்து சாப்டாம, சாப்பாடே இல்லாமல் பல நாள் கிடந்திருக்கு இந்தம்மா உழா ஜோய்ஸ். இதுக்குதான், ஒரு கல்யாணம் ன்னு ஆகிப் புருசன், புள்ள குட்டின்னு யாராவது இருந்திருந்தால் இப்படி இந்த நிலை வந்திருக்காதில்ல. நீயும் அடம் புடிக்காம கல்யாணம் பண்ணிக்கோடீ, 39 வயசு ஆனா என்ன உன் சம்பளத்துக்கு யாராவது நல்லவனா கிடைப்பான், வர்ற புருசனும் நீயுமா சேர்ந்து உன் அப்பாரை பார்த்துக்கலாம் ஸ்பின்ஸீ...சொன்னா கேளு" என்றதும் " கல்யாணம் பண்ணி ஒருத்தருக்கு, ஒரு குடும்பத்துக்கு சேவை செய்றதில வரும் நிம்மதியை விட பலருக்கு செய்றதுல நிம்மதி அதிகம் அக்கா, அதுவுமில்லாம பேச்சுவாக்கில நீங்களே பதில் சொல்லிட்டீங்க...நான் ஒரு ஸ்பின்ஸ்டர் -கன்னிப் பெண் ங்றதை சுருக்கி ஸ்பின்ஸீ ன்னு கூப்டீங்கல்ல அதான் பதில், பண வசதி உள்ள மாமனாரையேக் கூட கூடவச்சிகிட மாட்டாங்க , இதிலே கைகால் விளங்காத எங்கப்பாரை யார் கூட இருக்க விடுவாங்க அக்கா, உழா ஜோய்ஸ் மாதிரி இல்லாமல் நானே என்னையும்  பார்த்துப்பேன் அக்கா, நீங்க கவலப்படாதீங்க, ரவுண்ட்ஸ் வர்ற நேரம் ஆகுது அதுக்குள்ள நான் போய் ஜோய்ஸுக்கு முகத்தை துடைச்சி தலை ஒதுக்கிட்டு ஓடியாரேன்" என்று வேகமாய் போனாள் பிரபா.

   'இவளை மாத்தவே முடியாது போல' என்றெண்ணியபடி கண்மணி உட்கார "சிஸ்டர்.." என்றவாறு மீண்டும் வார்டு பாய் வந்து நிற்பதை பார்த்து "என்ன....டாக்டர் திரும்பவும் கூப்டறாரா...." எனக் கேட்க "இல்ல சிஸ்டர்... ஒரு 1000 ரூபாய் இருந்தால் குடுங்களேன்... பையன் பிறந்தநாள் வருது..அதான்..." என இழுக்க "யப்பா..  பேருக்கு தான்டா எனக்கு சம்பளம் அதிகம் , ஆனா, மாசம் பாதியாச்சுன்னா ஈஎம்ஐங்களை கட்டியே  பர்ஸ் காலி டா, இப்ப உனக்கு உதவக் கூடிய ஒரே ஆள் அவதான்.. ஸ்பின்ஸீ.." முதிர்கன்னி பிரபாவைக் காட்டினார் கண்மணி.

                                -முற்றும்-


Saturday, 10 August 2019

ஆத்தங்கரை மண்டபம்


                  ஆத்தங்கரை மண்டபம்
                                 ~~~~~~

     உச்சி வெய்யில் பொறுக்காமல் மர நிழலில் ஒதுங்கி ஆற்றையும் அக்கரையையும் நோட்டம் விட்டான் சந்நியாசி. பல ஆண்டுகளாய் நீர்வரத்து இல்லாததால் மண்டிப்போன புதர்கள் ஆற்றின் கரையளவு உயர்ந்து காடு போலத் தோற்றம் தந்தது.

    அக்கரையில் பராமரிப்பே இல்லாத பாழடைந்துபோன அந்த மண்டபம், அதனருகே ஆலமரம், பாலம் வழியே கடந்தால் பதினந்து நிமிடங்களில் அந்த மண்டபம் வரும்.

    பத்தரை மணி பஸ்தான் பாலத்தைக் கடக்கும் கடைசீ போக்கு வரத்து, அதற்குப்பின் விடியும் வரை ஆள் நடமாட்டம் இருக்காது, வேட்டியை உருவி முக்காடாய் போட்டுக்கொண்டு நடந்தால் ஆள் நடமாட்டம் இருந்தாலும் யாருக்கும் அங்க அடையாளம் தெரியாது. ராத்திரி நிலா வெளிச்சம் ஓரளவுதான்  இருக்கும்.
என்ன நடந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது, அதான் சரியான இடம் என்று தேர்வுசெய்து கொண்டான் சந்நியாசி.

    மெல்லியதாக செல்போன் அதிரவும் தாவி எடுத்து ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டாள் செல்வி. " ம்..சொல்லு...ம்.. அத்தையின் வீட்டுக்குப் போய் சேர்ந்துட்டதா இப்பதான் போன் பண்ணாங்க...ஆமா அப்பா அம்மா ரெண்டு பேருந்தான்..இல்ல.. விடியதான் வருவாங்க..இல்ல, ஆயா தூங்க பத்தரை ஆயிடும், ம்..தெரியும் ஆத்தோர மண்டபம் தானே..ம் வரேன்... ஆனா நீ என்னை ஏமாத்திட மாட்டீல்ல..
கட்டிப்பேல்ல...உங்கம்மா சத்தியமா?..ம் சரி..போனதடவை மறந்தது போல இல்லாம  இந்த தடவை மறக்காம வாங்கிட்டு வந்திடு.. இல்லைன்னா அவ்ளோதான்..என்னைக் கேட்டா..உன் சவுரியத்துக்கு வாங்கு... வெள்ளை டிரஸ்ஸா?.. அழுக்காயிடுமே.. ம்..சரி...குதிரை வாலா?.. ம்கும்..'போ' நீ வாங்கித் தந்ததேல்ல.. தலையில மாட்டிகிறது.. அது போட்டு வரேன்..ஐயோ ஆயா!" அவசரமாக துண்டித்தாள் செல்வி.

    அறை வாசலில் நின்ற ஆயா "நேரங்காலம் இல்லாமல போன் பேசிட்டே இருக்கே ..சாப்பாடு எடுத்துப் போட்டு  சாப்டுடீ..மணி ரெண்டாவப் போவது...என்ன வளர்ப்போ போ" என்றதை காதில் வாங்காத செல்வி இரவை நினைத்து பூரிப்பானாள்.

    சந்நியாசி நீட்டிய தாளில் கடைசீ யா எழுதியிருந்த '....பேப்பரில் மடித்துத் தரவும்' வரியால் கடுப்பாகிப்போன கடைக்காரர் அவனை முறைத்தவாறே "கெட்டுத் தொலையறது ன்னு  முடிவாயிட்டு அப்றம் எதுக்கு மூடி மறைக்கிற வேல சனியம்புடிச்சுதுங்க" என்றவாறே பொட்டலமாக மடித்துத் தந்தார்.

     இரவாயிற்று. "ராத்திரி நேரத்தில அரிவாளும் கையுமா எங்கேடா கிளம்பிட்டே" என்ற அம்மாவிடம் "வயிறு கடமுடாங்குதும்மா ஆத்தோரம் போய்ட்டு வரேன்" என்றுசொல்லி தண்ணீர் சொம்பை எடுப்பது போல் எடுத்து வாசலருகே வைத்துவிட்டு மறக்காமல் மாடத்திலிருந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நடந்தான் சந்நியாசி.

    வேட்டியை முக்காடகப் போர்த்திக் கொண்டு பாலத்தைக் கடந்து கரையொர இடப்பக்க ஒத்தையடிப் பாதையில்  நடந்து மண்டபத்தருகே வந்ததும் திரும்பிப் பார்த்தான், பாலத்திலும் யாரும் இல்லை, சாலையிலும் யாரும் இல்லை, நேராக பாதை போய்ச்சேரும் பக்கத்து கிராமத்தைப் பார்த்தான்.. ஆள் அரவமேயில்லை. "இதுவரை எல்லாமே சரியாவே போகுது" என்றெண்ணிய படியே சட்டென மண்டபத்தினுள் நுழைந்தான்.

      காலில் இருக்கும் கொலுசை ஓசைபோடாமல் கழட்டித் தலையணைக்கு கீழே வைத்து, செருப்பை கையில் எடுத்துக்கொண்டு பின்பக்க வழியாய் ஒத்தையடிப் பாதை ஏறிய செல்வி பாட்டியின் நடமாட்டம் தெரியுதா எனத் திரும்பிப் பார்த்தாள், ஒன்றும் தெரியவில்லை. எதிரே தொலைவில் மண்டபத்தையும் பாலத்தையும் பார்த்தாள், செருப்பைக் காலில் போட்டு நிதானமாய் நடந்தாள்.

    கீழே கிடந்த சருகுகளை காலால் தள்ளி இடத்தை ஒழுங்கு பண்ணி முன்னெச்சரிக்கையாக பாலத்தை பார்த்தபடி தரையில் உட்கார்ந்து அரிவாளை அருகில் வைத்துக் கொண்டான் சந்நியாசி.  முக்காடாகப் போட்டிருந்த வேட்டியை விலகிவிடாம இறுக்கினான். "எதான்னாலும் ஒரு ரசனை வேணும்டா" என தனக்குத் தானே சொல்லி செல் டார்ச் ஆன்செய்து மடியில் வைத்துவிட்டு ஒரு சிகரட்டை வாயில் வைத்து லைட்டரை எடுத்து உரசிப் பொருத்தினான்.தடயம் எதும் இருக்க கூடாதென்று மறக்காமல் லைட்டரை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். முதல் அனுபவம் என்பதால் காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல அவன். புகையை ஏகத்து இழுக்கப்போய்  இருமல் வந்தும், விடாமல் கப்கப்பென்று அடுத்தடுத்து அவசரஅவசரமாக புகையை இழுத்து ஊதித் தள்ளினான்.. மண்டபம் புகை மண்டலமாயிற்று.

     பாலத்திற்கு முன்பாகவே சாலையை குறுக்காக கடந்து வலப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு செல்வியின் கிராமத்திற்குப் போகும் ஒத்தையடிப் பாதையைப் பார்த்தான் பிரபு, வெறிச்சோடி கிடந்தது, நிலா வெளிச்சம் அதிகமில்லை. பத்து நிமிடம் நடந்தால் மண்டபம் வந்துடும், நேரம் சரியாக இருக்கும் என்று கணக்கிட்டான்.

    மறக்காமல் நாவற்பழம் இருக்கும் பையை எடுத்துக்கொண்டான் "இதில் என்னதான்  இருக்கோத் தெரியலை, கிடைக்கவும் மாட்டுது, விலைவேற அதிகமா சொல்றானோ. இதுமேல போய் இவளுக்கு ஏன் இவ்வளவு இஷ்டம்? இன்னைக்கு கேட்டுடனும்" என்று நினைத்தபடி பாதையில் நடக்கத் துவங்கினான். தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவம் தெரிந்தது செல்விதான், "சொன்ன நேரத்திற்கு வந்துட்டா" என சிரித்துக் கொண்டான். சுறுக்கென்று முள் குத்தவே "செருப்பைத்தாண்டி குத்துதே கருவ முள்ளோ" என்று குனிந்து செல் டார்ச் ஒளியில் பார்த்தான்.

   அதிக ஓசை எழுப்பாமல் கவனமாக நடந்தாள் செல்வி. அவளது நடை மெதுவானாலும் எண்ணங்கள் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தன. "செருப்பை ஆலமரத்து கிட்டேயே விட்டுடனும், திரும்பி வரும்போது மறந்துட்டா கூட காலைல பாக்குற யாருக்கும் சந்தேகம் வராது, பகல்ல கூட வந்து எடுத்துக்கலாம்.அடுத்த முறை மாந்தோப்பு தான் சரி, இங்க வர்றது கொஞ்சம் பயமாதான் இருக்கு. அவன்ட்ட சொல்லிடனும், போனதடவை மாதிரி ரொம்ப நேரம் இருக்கக் கூடாது சீக்கிரம் திரும்பிடனும், பாட்டி முழுச்சிடக் கூடாது" சாலையின் சரிவில் இறங்கி ஆலமரம் அருகே காலணிகளைக் கழட்டி விட்டு நடந்தவளுக்கு "திரும்பி போறப்ப பாட்டி முழுச்சிருந்தா என்ன பண்றது" என்ற எண்ணம் வர பகீர் என்று பயம் பற்றிக் கொள்ள பயத்தோடே மண்டபத்தை அணுகையில் அங்கே புகைக்கு நடுவே வெள்ளையாய்....பேய்..."வீவீவீல்ல்ல்ல்" வந்தவழியே பறந்தாள் செல்வி.

     திடீர சத்தம் கேட்டு சட்டென திரும்பிய சந்நீயாசிக்கு 6 அடி உயரத்திற்கு வெள்ளையாய் தலையை விரித்துப் போட்டு ஒரு பேய் போவது தெரிய அனிச்சையாய் அரிவாளையும் செல்லையும் பற்றிக் கொண்டு ஒரே தாவலில் ஆற்றின் குறுக்கே பாய்ந்தான் முள்ளும்,புதரரும் குத்துவது உணராமல், முதன் முதலாய் பிடித்த சிகரட் வாயிலிருந்து வீழ்ந்தது தெரியாமல் ஓடினான், நடுங்கும் உடலோடு ஒடியவன் திரும்பிப் பார்க்க அந்தப் பேய் கரையோரம் பறந்து போவது தெரிய தலைசுற்றி விழுந்தான்.

     குத்தியது பெரிய கருவமுள் தான் எனத்தெரிய அதைப் பிடுங்கிய பிரபு திடீரென வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான், தூரத்தில் செல்வி ஓடுவது தெரிய "ஏன் ஓடுறா" என்றெண்ணியபடி ஓட்டமும் நடையுமாக மண்டபம் வந்து வெளிச்சம் அடித்துப் பார்க்க அங்கே
மண்டப தரையில் ஒரு சிகரட் கிடப்பதை பார்த்து "எனக்காக வாங்கியாந்தா போல" என்றெண்ணி சிரித்துக் கொண்டான், "அதென்ன பக்கத்தில பொட்டலத்தில ரெண்டு சுருட்டு ரெண்டு  பீடி லாம்..  அவ்ளோ கேவலமா நினச்சுட்டாளா என்னைய?..."

    கோபமா செல் போன் நம்பர்களைத் தட்டி "ஏய் ..செல்வி...எங்கடீ ஒடிட்ட...குந்தாணி... வர சொல்லிட்டு வேடிக்கையா காட்ற " என்றான் பிரபு.

                            -முற்றும்-

    "இந்தா பால்.. ஆர்றதுக்கு முன்னாடி குடி..என்னாது அது.. காலைலேர்ந்து உக்காந்து எழுதிட்டே இருக்க..?"

    "அது... நம்ம ஆத்தங்கரை மண்டப சங்கதி... கதையா எழுதிருக்கேன்.. சிறுகதைப் போட்டிக்கு.."

    " எங்க காட்டு.. நானும் பாக்குறேன்..
என்னது...'செல்வி...குந்தாணியா?'..
என்னைய குந்தாணி ன்னுலாம் சொல்வியா நீ.. குந்தாணி ன்னுலாம் சொல்வியா... சொல்வியா..சொல்வியா.."

    "இருடி..அடிக்காத...அடிக்காதடீ..
இருடின்னா..அட ..இருடி ன்னா...அதெல்லாம் கதைக்காக டி.. கதைக்காக.." என்றான் பிரபு

    "கதைக்காக கூட என்ன அப்படி சொல்வியா, அப்ப மறுநாளு கடைக்கார் மூலமா சந்நியாசி  பேயோட்றதுக்கு உங்கப்பாரு கிட்ட வந்ததையும், நீ அவன்ட்ட விவரம் கேட்டு சிரிச்சதையும், என் செருப்பு காணா போனதையும், நீ நாவபழம் வாங்கியே தராததையும் சேர்த்து  சொல்றது தானே"

    "அதெல்லாம் அடுத்த பாகத்தில சொல்வோம் ல"

    "ஓ..இதில் ரெண்டாம் பாகம் வேறவா..வெளங்கும்..பால் ஆறுது பாரு".

                                     ****